இரண்டாவதன் பொருள் பற்றிய வாய்பாடுகள்

70.காப்பி னொப்பி னூர்தியி னிழையின்
ஓப்பிற் புகழிற்
1பழியி னென்றா
பேறலி னிழவிற் காதலின் வெகுளியிற் செறலி னுவத்தலிற் கற்பி னென்றா
அறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலின்
நிறுத்தலி னளவி னெண்ணி னென்றா
ஆக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலின்
நோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா
அன்ன பிறவு மம்முதற் பொருள
என்ன கிளவியு மதன்பால வென்மனார்.

இதுவும் இரண்டாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். காப்பு முதலாகச் சிதைப்பீறாக ஓதப்பட்டன வற்றினும், அத்தன்மைய பிறவற்றினும் வருஞ் சொல்லும், செயப்படு பொருளவாகி வரும் எல்லாச்சொல்வற்றினும், இரண்டாம் வேற்றுமைப் பாலன, எ-று.

காப்பு என்பது காவற்றொழிலையும், காக்கப்படும் பொருளையும்உணர்த்தும், ஏனையவும் தொழிலும் பொருளும் உணர்த்துமாறு அறிந்து கொள்க.

‘அன்ன பிறவினும்’ என ‘இன்’ செய்யுள் விகாரத்தால் தொக்கது.

இவை யெல்லாம் வகுத்துக் கூறவேண்டா; வினைக்குறிப்பென அடங்கும் எனின், அடங்கும் எனினும், செயப்படுபொருள் காரியகாரணம் தோன்ற நிற்பனவும் தோன்றாது நிற்பனவும் என இருவகைப்படும். எனற்கு வேறு ஓதினார் என்க. ஆடையை நெய்தான், குடத்தை வனைந்தான், இவை காரணகாரியம் தோன்ற நின்றன. ஊரைக் காத்தான் என்பது தோன்றாது நின்றது. ஈண்டு ஓதப்பட்டனவெல்லாம் தொழிற் சொல் ஆதலின், இவற்றை முடிக்குஞ் சொல்லும் இவையடியாகப் பிறந்த சொல்லென்க.

ஊரைக் காக்கும் என்பது காக்கப்படும் பொருள்மேல் வந்தது. காவலைக் காக்கும் என்பது காவற் றொழில்மேல் வந்தது. தந்தையை ஒக்கும். தேரை ஊரும், இழை என்பது அணிகலன், 2ஆடகத்தைப் பூணும். நூலையிழைக்கும், கிளியை ஓப்பும், கொடுப்பாரைப் புகழும். கொடாதாரைப் பழிக்கும், புதல்வனைப் பெறும். பொருளை இழக்கும். அறத்தைக் காதலிக்கும். பகைவரை வெகுளும். செற்றாரைச் செறும், நட்டாரை உவக்கும். நூலைக் கற்கும். வினையை அறுக்கும். ஆசையைக் குறைக்கும், பலவற்றைத் தொகுக்கும். சிலவற்றைப் பிரிக்கும். பொன்னை நிறுக்கும். அரிசியை அளக்கும். அடைக்காயை எண்ணும், அறத்தையாக்கும். தூணைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும். 3கணையை நோக்கும். 4கள்வரை யஞ்சும். அறிவைச் சிதைக்கும்.

அன்ன பிறவும் என்றதனால், இசையைப் பாடும், பகைவரைப் பணிக்கும் எனவும், குழையையுடையவன், வலியையுடையன், கல்வியையுடையன், காவலையுடையன் எனவும் ஆறாம் வேற்றுமைப் பொருள் மொழிமாற்றாகி வருவனவும் கொள்க. பிறவும் அன்ன.

அம்முதற் பொருள என்ன கிளவியும் என்றதனால், செயப்படு பொருளே யன்றி 5அதற்குக் காரணமாகிய பொருள் மேலும் பொருளினது உறுப்பின்மேலும் வருவனவும் கொள்க. மண்ணை வனைந்தான், நூலைநெய்தான், இவை காரணம்.விளிம்பை நெய்தான்--உறுப்பு. சுவரை யெழுதினான்--இடம். பிறவும் அன்ன.

(10)


1. பழிப்பின் என்பதும் பாடம்.

2. ஆரத்தைப் பூணும் என்பதும் பாடம்.

3. கருணையை நோக்கும் என்பதும் பாடம்.

4. கள்வர்க் கஞ்சும் என்பதும் பாடம்.

5. ‘பொருளினது உறுப்பின் மேலும், பொருள் நிகழும் இடத்தின் மேலும் வருவன கொள்க’ என்பதும் பாடம்.