மூன்றாவதன் பொருள் பற்றிய பாகுபாடுகள்

72.அதனி னியறல் அதற்றகு கிளவி
அதன்வினைப் படுதல் அதனி னாதல்
அதனிற் கோடல் அதனொடு மயங்கல்
அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி
அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி
அதனோ டியைந்த வொப்பல் ஒப்புரை
இன்னா னேது ஈங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.

இதுவும் மூன்றாம் வேற்றுமைக்குரியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அதனினியறன் முதலாக ஒப்பல் ஒப்புரை ஈறாக எடுத்தோதப்பட்ட சொல்லினான் வரும் பொருண்மையும். இன்ஆன், ஏது என இவ்விடத்து வரும் அத்தன்மைய பிற சொற்களும் மூன்றாம் வேற்றுமைப்பாலன, எ-று.

அதனின் இயறலாவது:--இயலப்படுவதற்குக் காரணமாகிய பொருண்மேல் உதாரணவாய்பாட்டான் வந்தது. மண்ணினானியன்ற குடம், அரிசியானாகிய சோறு.

அதற்றகு கிளவியாவது:--அதனாற் றகுதியை யுடைத்தாயிற்றென்னும் பொருண்மை தோன்ற வருவது. கண்ணான் நல்லன், குணத்தான் நல்லன், நிறத்தான் நல்லன் என உறுப்பும், பண்பும்பற்றி வருவன.

அதன்வினைப் படுதலாவது:--ஒன்றன் றொழின்மேல் வருதல், புலி பாய்தலாற்பட்டான், ஓட்டாற்கடிது குதிரை என்பன.

அதனினாதலாவது:--ஆக்கத்திற்கு ஏதுவாகிவருவது வாணிகத்தினாயினான், எருப்பெய்து இளங்களை கட்டமையாற் பைங்கூழ் நல்லவாயின.

அதனிற் கோடலாவது:--ஒன்றனானே ஒன்றைக்கோடல், காணத்தாற் கொண்ட வரிசி.

அதனொடு மயங்கலாவது:--ஒன்றோடொன்று விரவிவருதல். பாலொடு கலந்த நீர்.

அதனொடு இயைந்த ஒருவினைக் கிளவியாவது:--ஒருவினையான் இரு பொருள் முடிவது. படையொடு வந்தான் அரசன்.

அதனொடு இயைந்த வேறு வினைக்கிளவியாவது:--வேறு வினையுடையன இரண்டு சொல் ஒரு வினையொடு தொடர்வது. காவோ டறக்குளந்தொட்டான்.

அதனோடு இயைந்த ஒப்பலொப்புரையாவது:--உவமை யின்றி யிதுவும் அதுவும் ஒக்குமென அளவினாலும் நிறையினாலும் எண்ணினாலும் வருவன, இதனோடு ஒக்கும் இது, இக்கூற்றோடொக்கும் இக்கூறு.

இன்னென்பது இன் என்னும் சொல், ஆனென்பது ஆன் என்னும் சொல், ஏது வென்பது ஏது என்னும் சொல்.

அன்ன பிறவாவன;--காரணம், நிமித்தம், துணை, மாறு என்பன. இவையும் மூன்றாம் வேற்றுமைப் பொருளுணர்த்து முருபுகளும் பொருளுணர்த்தும்சொற்களுமாம், எ-று. புகையுண்மையின் நெருப்புண்மையறிக புகையுண்மையான் நெருப்புண்மையறிக, புகை யேதுவாக நெருப்புண்மையறிக, புகை காரணமாக நெருப்புண்மையறிக, புகை நிமித்தமாக நெருப்புண்மையறிக, சுக்கிரீபன் துணையாக இலங்கை கொண்டான், “அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே”. (புறம். 20)

இன்னும், அன்னபிறவு மென்றதனான், ஓடு ஆல் எனவரும் உருபுங் கொள்க.

“என்னோ டிருப்பினும் இருக்க இளங்கொடி
தன்னோ டெடுப்பினும் தகைக்குந ரில்லென்று”

(மணி- சிறை விடுகாதை. 35-6)

“கணிகொண் டலர்ந்த நறவேங்கையோடுங் கமழ்கின்ற காந்தளிதழா
லணிகொண்ட”

(சூளா. அரசியல், 197)

என்புழி ஓடு வந்தது.

ஆன் வந்தவழி யெல்லாம் ஆல் வருதல் வழக்கினிற் கண்டு கொள்க.

(12)