நான்காவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு

74.அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின்
அதற்குப் படுபொருளின் அதுவாகு கிளவியின்
அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாகலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பினென்
றப்பொருட் கிளவியும் அதன்பால வென்மனார்.

இதுவும் நான்காம் வேற்றுமைக்கண் வரும் பொருள் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அதற்கு வினையுடைமை முதலாகச் சிறப்பீறாகச் சொல்லப்பட்டவற்றின்கண் அப்பொருள்பட வருஞ் சொல்லும், உம்மையால் அந்நிகரன பிறபொருட்கண் வருஞ் சொல்லும் நான்காம் வேற்றுமைப்பாலன, எ - று. உம்மை எச்சவும்மை.

அதற்கு வினையுடைமையின் என்பது மேற்சொல்லப்பட்ட கொடைப் பொருண்மையே யன்றி உருபேற்கும் பொருட்கு வினையாதலுடைமை கூறும் வழியும் நான்காம் வேற்றுமைப் பாலனவாம், எ - று.

எ - டு. அவர்க்குப் போக்குண்டு, அவர்க்கு வரவுண்டு, இவை வினை. கரும்பிற்குழுதான் என்பதுமது.

அதற்கு உடம்படுதலென்பது உடம்பாடு கூறும் வழியும் நான்காவதாம், எ-று.

எ - டு. கொலைக்குடம்பட்டான்.

அதற்குப் படுபொருளாவது-உருபேற்கும் பொருட்கு இயல்பு கூறும் வழியும் நான்காவதாம். எ - று.

எ - டு. இதற்கு நிறங்கருமை; இதற்கு வடிவு வட்டம்; இதற்கு அளவு நெடுமை; இதற்குச் சுவை கார்ப்பு; இச் சொற்குப் பொருள் இது; இவ்வாடைக்கு விலை இது எனவும், இவ்வாறு வருவனவும் கொள்க. இன்னும் அதற்குப் படுபொருள் என்றதனான், உடைப்பொருளும் அவ்விடத்திற்கு ஆம்பொருளும், காலத்திற்கு ஆம்பொருளுமாகி வருவனவும் கொள்க. அவற்குச் சோறுண்டு. ஈழத்திற் கேற்றின பண்டம், காலத்திற்கு வைத்த விதை எனவரும்.

அதுவாகுகிளவி--ஒன்றொன்றாகத் திரிந்துவரும் பொருட்கு வருவது. கடிசூத்திரத்துக்குப் பொன், கும்மாயத்திற்குப் பயறு.

அதற்கியாப்புடைமையாவது--உருபேற்கும் பொருட்கு வலியாதலுடைமை.

‘யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கை’

(நாலடி. 28)

என்றவழி வலியெனப் பொருளாயிற்று.

எ - டு. போர்க்கு வலி குதிரை; நினக்கு வலி வாள் எனவரும்.

அதற்பொருட்டாகலின் என்பது-ஒரு பொருட்காக வென்பது படவருதல்.

எ - டு. கூழிற்குக் குற்றேவல் செய்யும், கூலிக்கொலிக்கும்.

நட்பு - அவற்குத் துணை, அவற்கு நட்பு எனவரும், பகை - அவற்குப் பகை. காதல் - மகற்குக் காதலன், சிறப்பென்பது - இன்றியமையாமை பற்றிவரும்.

எ - டு. யாமுமக்குச் சிறந்தன மாத லறிந்தனி ராயின் எனவும்,

“நிலத்திற் கணியென்ப நெல்லுங் கரும்பும்”

(நான்மணிக். 9)

எனவும் வரும்.

உம்மையாற் கொள்ளப்படுவன - இவ்வூர்க் கவ்வூர்க் காதம், நாளைக்கு வரும், இவர்க்குத் தகும் இது, இவர்க்கு நன்மை பயக்கும், அவற்குப் பிறந்த மகன். பிறவும் இந்நிகரன வெல்லாம் கொள்க

(14)