ஐந்தாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஐந்தாம் வேற்றுமையாவது இன் என்று பெயர் கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச்சொல். அஃது இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் என உணர்த்தும். எனவே இவ்வாய்பாட்டான் வரும் பொருண்மை யெல்லாம் ஐந்தாவதாம், எ - று. அவையாவன;- நீங்க நிற்பதூவும், பொருவும், ஏதுவும் என்பன, அவற்றுள் நீங்க நிற்பது பொருள் நீங்கி நிற்பதூஉம். இடம் நீங்கி நிற்பதூஉம் என இருவகைப்படும். பொருவும் மிகுதலும், குறைதலும், ஒத்தலும் என மூன்று வகைப்படும், அவற்றுள் பொருவும், ஏதுவும் வருகின்ற சூத்திரத்தால் கூறுதலானும், பல்பொருட் கேற்பின் நல்லதுகோடல் என்பதனானும் இச்சூத்திரம் நீங்க நிற்பது குறித்ததென்பது கொள்ளப்படும். எ - டு. வரையினின்றும் வீழாநின்றது அருவி. (15)
1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.
|