ஐந்தாவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு

76.வண்ணம் வடிவே அளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை யென்றா
முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
புதுமை பழமை ஆக்கம் என்றா
இன்மை யுடைமை நாற்றம் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதலென்
றன்ன பிறவும் அதன்பால என்மனார்.

இதுவும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்
வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வண்ணம்முதலாகப் பற்றுவிடுதல் ஈறாக ஓதப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் ஐந்தாம் வேற்றுமைப் பாலன, எ - று.

யாதானும் ஒன்றைப் பொருவிக் கூறும்வழி. பண்பினானாதல், தொழிலினானாதல், பொருளினானாதல் கூறல் வேண்டுதலின், அவையெல்லாம்எடுத்தோதப்பட்டன.

எ - டு. இதனிற்கரிது, இதனின் வட்டம், இதனின் நெடிது, இதனிற் கைக்கும், இதனிற் றண்ணிது, இதனின் வெய்து, இதனின் அஞ்சும், இதனின் நன்று, இதனிற்றீது, இதனிற் சிறிது இதனிற் பெரிது, இதனின் வலிது, இதனின் மெலிது, இதனிற் கடிது, இதனின் முதிது, இதனின் இளைது, இதனிற் சிறந்தது, இதனின் இழிந்தது, இதனிற் புதிது, இதனிற் பழைது, இதனின் ஆக்கம், இவனின் இலன், இவனின் உடையன், இதனின் நாறும், இதனிற்றீரும், இவரிற் பலர் இவர், இவற்றிற் சில ஏறும், இதனிற் பற்றுவிடும்.

அன்ன பிறவும் என்றதனான், இவனிற் காக்கும். இவனிற் பண்ணும், இவனிற் பாடும் என வருவன கொள்க.

இவற்றுட் பெரிதென்பது மிகுதி குறித்து நின்றது. சிறிதென்பது குறைவு குறித்து நின்றது. ஏனையவும் இவ்வாறு நோக்கிக் கொள்க.

இவையெல்லாம் ஒப்புக்குறித்துழி உவமையாம், ஏதுக்குறித்துழிக் கரிதாயிற்று, வட்டமாயிற்று என உதாரணங்காட்ட உருபேற்ற பொருளெல்லாம் ஏதுவாம்.

(16)