ஏழாம் வேற்றுமை

79.1ஏழா குவதே,
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் யிடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பில் தோன்றும் அதுவே.

ஏழாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஏழாம் வேற்றுமையாவது கண் எனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல். அது வினை நிகழுமிடத்து நிலத்தினும். காலத்தினும், அவ்விருவகைக் குறிப்பினும் தோன்றும்.
எ - று.

எனவே, தொழில் நிகழாதவழி, நிலமும், காலமும் ஏழாம் வேற்றுமை யாகா என்றவாறாம்.

எ - டு. அரங்கின்கண் வனைந்தான், மாடத்தின்கண் இருந்தான், இவை நிலம், காலைக்கண் வனைந்தான், மாலைக்கண் வனைந்தான். இவை காலம். போரின்கண் வந்தான் என்றவழி இடங் குறித்தான் ஆயின், பொர நின்றவிடத்து வந்தான் எனவும், காலங் குறித்தானாயின் பொர நின்ற காலத்து வந்தான் எனவும், நிலமும் காலமும் குறித்துக் கொள்ளக்கிடந்தது, ஆலின் கீழ்க் கிடந்தது ஆ, ஆலின்கண் இருந்தது குரங்கு என்றவழி கீழ்க் கிடந்தது ஆ; மேலிருந்தது குரங்கு என இவ்வாறு வரும் இடவேறுபாடுங் குறித்துக்கொள்ளப்படும், பிறவும் அன்ன.

இனி அப் பொருண்மைக்கண் உருபு புலப்படாமல் இட வேறுபாடு காட்டுவன சில கண்டு அவற்றை எடுத்தோதுகின்றார் வருகின்ற சூத்திரத்தான்.

(19)


1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.