ஏழாவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு

80.கண்கால் புறம் அகம் உள்உழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.

இது ஏழாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். கண்முதலாக இடம் ஈறாக ஓதப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் ஏழாம் வேற்றுமைப் பாலன, எ-று.

இவையெல்லாம் பெயரைச் சார்ந்து தனித்தனி வரில் பெயராகி உருபேற்கும், பெயரைச் சாராது இடமும் காலமும் ஆகிய பொதுமை உணரவரின், உருபு மாத்திரமாகி நிற்கும். இடம் வேறுபாடு உணரவரின் உருபு புலப்படாது பொருள் உணரவரும்.

அகத்தை, அகத்தொடு, புறத்தை, புறத்தொடு என்பன தனித்து உருபேற்றன, அரங்கினுள் அகழ்ந்தான். மாடத்துழை இருந்தான் என்பன உருபாகி நின்றன.

இனி இடம் வேறுபாடு காட்டுமாறு;--கண் என்பது இடம். அரசர்கட் சென்றான் என்பது நெறிக்கட் சென்றான் என்றாற்போலச் சேறற்றொழிற்கு அரசன் ஆதாரம் ஆதலின்றி அவனிடத்துச் சென்றான் என உருபு புலப்படாமல் இடம் என்பதோர் பொருள் உணர்த்தியவாறு கண்டு கொள்க. கால்--ஊர்க்கா னிவந்த பொதும்பர். ஊரை யடுத்தல் ஆகிய பொருள் மேல் வந்தது. புறம்--சுவர்ப்புறத்துப் பாவை. பாவைக்கு ஆதாரமாகி நின்றது சுவராயினும் அச்சுவரகத்துப் பாவையின்மையின் புறமென ஒரு பொருள் தோன்ற நின்றது. அகம்--எயிலகத்துப் புக்கான்எயிர் புறம் உண்டாகலின் அகம் என ஒருபொருள் தோன்றி நின்றது. உள்-சிலையுட் பொருள். சிலைப்புறத்துப் பொருள் இன்மையின் உள் என ஒரு பொருள் தோன்றி நின்றது. உழை அரசனுழை இருந்தான். அரசன் அருகென ஒரு பொருள் தோன்றி நின்றது. கீழ்-மாடத்தின் கீழ் இருந்தான்: மேல் அன்மை காட்டிற்று. மேல்-மாடத்தின் மேலிருந்தான்: கீழ் அன்மை காட்டிற்று. பின்-அரசன் பின் இருந்தான்: முன் அன்மை காட்டிற்று. சார்-காட்டுச்சார் ஓடும் குறுமுயல்: காட்டைச் சார்ந்த இடம் என்பது தோன்றிற்று. அயல்-மனை அயல் இருந்தான்: மனை அல்லாத பிறஇடம் தோன்ற வந்தது. புடை என்பது பக்கம். எயிற் புடை நின்றான். எயிலின் கண் ஒருபக்கம் என்பது தோன்றிற்று: தேவகை என்பது திசைக்கூறு. அரங்கின் வடக்கிருந்தான், தெற்கிருந்தான் என்றவழி, வடக்கு தெற்கென ஒரு பொருள் தோன்றி நின்றது. முன்-அரசன் முன் இருந்தான்: பின் அன்மை காட்டிற்று. இடை, கடை, தலை என்பன கலத்தின் இடை நின்றான்; கலத்தின் கடை நின்றான்; கலத்தின் தலைநின்றான்: என மரக்கலத்தின் இட வேறுபாடு காட்டின. வலம், இடம் என்பன அரசன் வலத்திருந்தான் அமைச்சன், அரசன் இடத்திருந்தான் சேனாபதி என வலம் இடம் எனச் சில பொருள் தோன்றி நிற்றன.

அன்ன பிறவும் என்றதனால், இல், வயின், வழி, மாட்டு, தேம், மருங்கு, பால், வாய், முதல் என வருவன வெல்லாம் கூறிய நெறியினால் வேறுபாடு உணர்த்துவனவும், உருபுமாத்திரமாகி நிற்பனவும், பெயராகி நிற்பனவும் அறிந்துகொள்க.

(20)