அறுவகை வேற்றுமைக்கும் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வேற்றுமைக்கு உரிய பொருளை விரியக் கூறுங்கால், முதற்பெயர் இறுதிக்கண் இயலும் தொகைச் சொல்லின் கண், தொகையாம் தன்மையிற் பிரிந்து, பலநெறியாகப் பொருளைப் புணர்ந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. தொகுத்தல் என்பது செறிதல், முதற் பெயரோடு செறிவது தொகை என்று பெயர் ஆயிற்று. அவையாவன:--படைக்கை, குழைக்காது, தாய்மூவர், குதிரைத்தேர், கருப்புவேலி, வரையருவி, பாண்டியநாடு, குன்றக்கூகை என்பன. இவற்றுள் இறுதிப் பெயர் முதற்பெயரோடு ஒட்டி நிற்றலின் தொகை என்றார். இவை விரிய நின்ற காலத்து. இவற்றைப் புணர்ந்துஒலிக்கும் சொல்லாவன;--படைக்கை என்றவழி படையைப் பிடித்தகை எடுத்த கை, ஏந்திய கை எனவும்; குழைக்காது என்றவழி குழையையுடைய காது, செறித்த காது, இட்ட காது, அணிந்த காது எனவும்; தாய் மூவர் என்ற வழித் தாயோடு கூட மூவர், கூடிய மூவர் எனவும்; குதிரைத்தேர் என்றவழிக் குதிரையாற் பூட்டப்பட்ட தேர், பூணப்பட்ட தேர். ஓட்டப்பட்ட தேர் எனவும்; கரும்புவேலி என்றவழி கரும்பிற்கு ஏமமாகிய வேலி, வலியாகிய வேலி எனவும்; வரையருவி என்றவழி வரையினின்றும் வீழா நின்ற அருவி, ஒழுகா நின்ற அருவி எனவும்; பாண்டிய நாடு என்றவழிப் பாண்டியனது நாடு, உடைய நாடு, எறிந்த நாடு, கொண்ட நாடு எனவும்; குன்றக்கூகை என்றவழி, குன்றத்துக்கண் வாழாநின்ற கூகை, இராநின்ற கூகை எனவும் இவ்வாறு வருவன. இவையெல்லாம் எடுத்தோதின் வரம்பில ஆதலின், எல்லாச் சொல்லும் உரிய எனப் புறநடை ஓதல் வேண்டிற்று. இவற்றுள் ஆறாம்வேற்றுமை உருபு புலப்பட்டவழிப் பெயரோடு முடிந்தும், புலப்படாத வழிச் சிறுபான்மை வினைக்குறிப்போடும். வினையோடும் முடிந்தும், ஏனை வேற்றுமைகள் எல்லாம் வினையோடும், வினைக் குறிப்போடும் முடிந்தும் வருதலால் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் வேற்றுமைக்கு முடிபாம் என்று கொள்க. அவ்வழி, வினையும் வினைக்குறிப்பும் ஆகிய சொற்கள் இறுதி நின்ற பெயரோடும் முடிபுழிப் பெயரெச்சமாகியும், தனிவரின் முற்றாகியும் வரும் என்று கொள்க. இச்சூத்திரத்தானே வேற்றுமைக்கு முடிபு கூறினாரும் ஆம். (21)
1. இந்நூற்பாவில் முன் இரண்டடிகளை ஒரு நூற்பாவாகவும் பின்னிரண்டடிகளை ஒரு நூற்பாவாகவும் கொள்வர் இளம்பூரணர். வேற்றுமை யியல் முற்றும்.
|