இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்து: ஒன்றற்கு உரிய உருபு ஒன்றனோடு மயங்குதலும், ஒன்றற்கு உரிய பொருள் ஒன்றனோடு மயங்குதலும் கூறினமையாற் பெற்ற பெயர்.
இதனுள் இச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின்,
இரண்டாவது ஏழாவதனொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
கருமம் என்பது வடமொழிச் சிதைவு. செயப்படு பொருளை அவர் கருமம் என்று வழங்குப.
இ - ள். செயப்படு பொருள் அல்லாத சார்பு என்னுஞ் சொற்கு ஏழாம்வேற்றுமை உரிமையாதலும் உரித்து. எ-று.
உம்மை எதிர்மறையாதலால் இரண்டாம் வேற்றுமை உரித்தாதல் பெரும்பான்மை.
எ - டு. மனையைச் சார்ந்தான்-மனைக்கட் சார்ந்தான் எனவரும். தூணைச் சார்ந்தான் என்றாற்போலச் சாரப்பட்ட பொருள் தோன்றாது இடம் தோன்றுவதற்கும் பொருள் தோன்றுவதற்கும் உரித்தாவதாயிற்று.
ஒரு பொருள் இரண்டு உருபிற்கும் உரித்தாகி வருதலின் உருபு மயக்கம் ஆயிற்று.
(1)