இதுவும் இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வ
தோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். முதலும் சினையும் சேரவருஞ் சொற்கு, முதற்கண் அது வரின் சினைக்கு ஐ வரும், முதற் கண் ஐ வரின் சினைக் கண் கண் வருதல் தெளியப்பட்டது என்று சொல்லுவர் புலவர், எ - று. மயக்கம் அன்று என்றவாறாம்.
எ - டு. யானையது கோட்டைக் குறைத்தான்; யானையைக் கோட்டின்கண் குறைத்தான் என வரும்.
‘கண் என் வேற்றுமை சினை முன்வருதல் தெள்ளிது’ எனவே தெள்ளிதன்றிச் சிறுபான்மை ஐ வருதலும் கொள்ளப்படும்.
எ - டு. யானையைக் கோட்டைக் குறைத்தான்.
(4)
1. இந்நூற்பாவில் முன்னிரண்டடிகளை ஒரு நூற்பாவாகவும், பின்னிரண்டடிகளை வேறொரு நூற்பாவாகவும் கொள்வர் பிறவுரையாசிரியர்கள்.