மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிக்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இருபொருட்கண் ஒருதலை பற்றிவரும் ஒடுச்சொல் அவ்விரு பொருளினும் உயர்ந்த பொருளின் வழியை உடைத்து. எ-று. வழி என்றது அப்பொருளின் வழியாகிய பொருள் என்று கொள்க. உயர்வு என்பதைச் சிறப்பென்று கொள்க. கொள்ளவே, அத்தொழிற்குச் சிறவாத பொருட்கண் வரும் என்றவாறாம். எ - டு. அமைச்சரோடு இருந்தான் அரசன். இருந்தான் என்னும் தொழிற்குச் சிறந்தான் அரசன் ஆதலின், சிறவாத அமைச்சர் மேல் ஒடுவந்தது. அரசனோடு இருந்தார் அமைச்சர் என்றவழி இருந்தார் என்னும் தொழிற்குச் சிறந்தார் அமைச்சர் ஆதலின் ஒடு அரசர்மேல் வந்தது. இஃது உடனிகழ்ச்சி ஆகலான் அத்தொழிற்கு இருவரும் சிறந்தார் எனிற் குற்றம் என்னையெனின், அரசரோடு இருந்தார் அமைச்சர், அவரை மந்திரம் இருமின் என்றார் என்றவழி, அச்சுட்டு ஈரிடத்தும் செல்லாமையாலும், தொழில் முடியும் பெயரே சிறப்புடையதெனவுங் கொள்க. இனிச் சிறப்புடைய பொருண்மேல் ஒடு வருமெனப் பொருள் உரைத்தார் உளர் 1ஆயினும், இப்பொருள் பாணினியார்க்கும் ஒக்கும். (7)
1. பிறவுரையாசிரியர்கள் அனைவரும் இங்ஙனமே பொருளுரைப்பர்.
|