மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் உரியதோர் இயல்பு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மூன்றாவதன்கண்ணும் ஐந்தாவதன்கண்ணும் விளங்க எடுத்தோதப்பட்ட ஆக்கம் என்னும் சொல்லோடு தொடர்புபட்ட ஏதுக்கிளவி, இருவகை வேற்றுமைக்கும் நோக்கு ஒரு தன்மைய, எ - று.
எ - டு. வாணிகத்தான் ஆயினான்; வாணிகத்தின் ஆயினான் என இருவாற்றானும் வரும்.
ஆக்கமொடு புணர்ந்த ஏது என விதந்தோதிய அதனான், ஏனை ஏதுக்கள், நோக்கு ஒவ்வாத நிலைமைய என்பது பெறுதும், “அமைத்தனாற் றக்கான் அரசன்” என்னும் பொருட்கண், “அமைத்தனிற் றக்கான் அரசன்” என்றவழித் திரிபின்றி ஏதுப் பொருள்படுதலின்றி, அமைத்ததனைப்போல வென்றாதல், அமைத்ததனிற் காட்டில் என்றாதல் பொருள் உரைக்கவும் படுமாகலால், ஆக்கமொடு புணர்ந்த ஏதுவே ஒப்ப முடிவது. ஏனைய ஏதுக்கள் திரிபுடைய என்பது அறிவித்தற்கு இச்சூத்திரங் கூறப்பட்டது.
(8)