பலவின்பால் ஈறு

9.அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவறி சொல்லே.

பலவறிசொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பலவற்றை யுணரவருஞ் சொல் அ, ஆ என்னும் உயிரெழுத்தினையும், வ என்னும் உயிர்மெய்யெழுத்தினையும் ஈறாகவுடைய அக்கூற்று மூன்று, எ-று.

எ - டு. உண்டன, உண்ணாநின்றன, உண்பன, உண்ணா, உண்குவ; இவை வினை, கரிய, நெடிய; இவை வினைக்குறிப்பு. பல, சில, யா, வருவ; இவை பெயர்.

வ என்பது அகரத்துள் அடங்காதோ எனின், அடங்காது. என்னை? உண் என்னும் தொழிற்சொல் இறந்தகாலங் குறித்துழி உண்டு எனவும், நிகழ்காலங் குறித்துழி உண்கின்று எனவும், எதிர்காலங் குறித்துழி உண்பு எனவும் நின்று, அன், அள், அர், அது, அ என்னும் பால் உணர்த்தும் எழுத்தோடு கூடிப் புணருழி, அன் சாரியை மிக்கும், இயல்பாகியும் இறந்தகாலத்துக்கண் உண்டனன், உண்டனள், உண்டனர், உண்டது, உண்டன, உண்ட எனவும்; நிகழ்காலத்துக்கண் உண்கின்றனன், உண்கின்றனள், உண்கின்றனர், உண்கின்றது, உண்கின்றன எனவும்; எதிர்காலத்துக்கண் உண்பன், உண்பள், உண்பர், உண்பது, உண்பன எனவும் வரும். உண்கு என நின்ற எதிர்காலச்சொல் பன்மை யுணர்த்தும் அகரம் ஏறியவழி உண்க என வியங்கோட்பொருண்மைப் படும் ஆகலின், ஆங்கு உண்குவ என வகர வுயிர்மெய் கொடுக்கவேண்டுதலின் வகரமென வோதல் வேண்டுமென்க.

(9)