தடுமாறு தொழிலில் இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கல்

91.

1தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டும் மூன்றுங்
கடிநிலை இலவே பொருள்வயி னான.

இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். இரண்டு பொருட்கண் தடுமாறி வரும் தொழிலையுடைய பெயர்க்கு இரண்டாவதும், மூன்றாவதும் வருதல் நீக்கப் படா: பொருள் கொள்ளுமிடத்து, எ-று.

அஃதாவது ‘புலிகொல் யானை’ என்பது. இதற்குப் பொருள் உரைக்குங்கால், புலியைக் கொன்ற யானை எனவும். புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் இவ்வாறு இருவகை வேற்றுமைக்கும் உரித்தாகலின் மயக்கம் ஆயிற்று. பொருள் துணியுமாறு வருகின்ற சூத்திரத்தாற் கூறுப.

(10)


1. இங்கே, ஏனை உரையாசிரியர்கள், அதுவென் வேற்றுமை என்ற சூத்திரத்தை வைத்து உரை செய்துள்ளார்கள்.