அச்சப்பொருளில் ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்கல்

95.

அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும்
எச்ச மிலவே பொருள்வயி னான.

ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். அச்சம் என்னும் பொருண்மைக்கு ஐந்தாவதும் இரண்டாவதும் பொருட் பக்கத்தான் ஒழிபில, எ-று. எனவே சொற் பக்கத்தான் ஏனை வேற்றுமையும் ஒழிபில எ-று.

எ - டு. கள்ளரை அஞ்சும் என்பது செயப்படுபொருள் குறித்து நின்றது. கள்ளரின் அஞ்சும் என்பது பொரூஉப்பொருளும், ஏதுவும் குறித்து நின்றது. இனிக் கள்ளரான் அஞ்சும், கள்ளர்க் கஞ்சும், கள்ளர் மாட்டு அஞ்சும் எனவரினும், அவை ஏதுக் குறித்து நிற்றலின் பொருள் வகையான் ஏதுவாகி யடங்கின.

(14)