வாழ்ச்சிக்கிழமையில் ஆறாவதும் ஏழாவதும் மயங்கல்

97.

ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழு மாகும் உறைநிலத் தான.

ஆறாவதனோடு ஏழாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஆறாம் வேற்றுமைக்கண் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழாவதும் ஆம்; பொருள் உறையும் நிலத்துக்கண், எ-று. எனவே உறையாப் பொருட்கண் வாராது என்றவாறாம்.

உறை பொருட்கண் வந்தது--யானையது காடு. உறையும் நிலத்துக்கண் வந்தது--காட்டது யானை. அது காட்டுள் யானை எனவும் வரும்.

(16)