வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற்சொல்லப்பட்டன போல்வன பிறவும் ஆகித் தொன்னெறியிற் றப்பாது, உருபானும் பொருளானும் இயல்பு தடுமாறி, இரண்டிடத்தும் நிலைபெறும் வேற்றுமைச் சொல்லெல்லாம் ஆராய்ந்து உணர்வார்க்குப் பொருள் திரியும் இடன் இல, எ-று. என்றது--பரந்துபட்ட சொல்லெல்லாம் எடுத்து ஓதல் அரிதாகலான் ஈண்டு எடுத்து ஓதப்பட்ட நிகரன வாகி உயர்ந்தோர் வழக்கினும், சான்றோர் செய்யுளினும் வரூஉம் வேற்றுமை மயக்கம் எல்லாம் இதுவே ஓத்தாகப் பொருள் உரைத்துக் கொள்க என்றவாறாயிற்று. எ - டு. ‘நோயின் நீங்கினான்’ என்பது ‘நோயை நீங்கினான்’ எனவும், ‘சாத்தனை வெகுண்டான்’ என்பது ‘சாத்தனொடு வெகுண்டான்’ எனவும் ஆம். இத்துணையும் ஒரு வேற்றுமைக்குரிய பொருளே ஏனை வேற்றுமைக் கண்ணும் மயங்குமாறு கூறப்பட்டது. (17)
|