இத் தலைச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின்2 எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. எழுத்து எனப்படுப - எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப - அகரமாகிய முதலை யுடையனவும் னகரமாகிய இறுவாயினையுடையனவுமாகிய முப்பதென்று சொல்லுப (ஆசிரியர்); சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடை - சார்ந்து வருதலாகிய இலக்கணத்தினையுடைய மூன்றும் அல்லாவிடத்து. மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லுப என்றவாறு. எ - டு: அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஒள; க்-ங்-ச்-ஞ்-ட்-ண்-த்-ந்-ப்-ம்-ய்-ர்-ல்-வ்-ழ்-ள்-ற்-ன் என வரும். எனப்படுப என்ற சிறப்பான், அளபெடையும் உயிர்மெய்யும் வரி வடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப்பட்டன. அ-ஆ என்பன பெயர்; முறை அம்முறை; தொகை முப்பது; அவற்றுள், அகரம் தானும் இயங்கித் தனிமெய்களை இயக்குதற் சிறப்பான், முன்வைக்கப்பட்டது. னகாரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது. தொகை (யென்பது) தொகையுள் தொகையும், தொகையுள் வகையும் தொகையுள் விரியும், வகையுள் தொகையும், வகையுள் வகையும், வகையுள்விரியும், விரியுள் தொகையும், விரியுள் வகையும், விரியுள் விரியும் என ஒன்பது வகைப்படும். எழுத்தென்பது தொகையுள்தொகை, முப்பதென்பது அதன் வகை, முப்பத்துமூன்றென்பது அதன் விரி. முப்பதென்பது வகையுள்தொகை. அளபெடை தலைப்பெய்து நாற்பதென்பது அதன் விரி. முப்பத்துமூன்றென்பது விரியுள்தொகை, நாற்பதென்பது அதன் வகை. உயிர்மெய் தலைப்பெய்து இருநூற்றைம்பத்தாறென்பது அதன் விரி. செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது. அகரமுதல் னகரவிறுவாய் என்ன, இருபெயரொட்டாகுபெயரான் முப்பதன் மேல்நின்றன. (1)
1.இப் பெற்றி யறியாத உரையாசிரியர் முதலியோர் இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தை ஓராற்றால் தொகுத்துணர்த்துதலின் நூன்மரபாயிற்றென்பாரும், இவ்வோத்துட் கூறப்படும் விதிகள் - மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகலின் நூன்மரபென்னும் பெயராயிற்றென்பாருமாயினார். இவ்வதிகாரத்துட் கூறும் எழுத்திலக்கணத்தினைத் தொகுத்துணர்த்துதலாற் பெற்ற பெயராயின் அதிகார மரபெனப்படுவதன்றி நூன்மரபெனப்படாமையானும், இவ்வோத்துட் கூறப்படுவன செய்கையோத்திற்கும் பொருளதிகாரத்துள் செய்யுளியல் ஒன்றற்குமே கருவியாவதன்றி மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகாமையானும் அவருரை போலியுரையாதலறிக என்பது - தொல். சூத்திரவிருத்தி. 2."இனி உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் இச்சூத்திரம் பெயரும் முறையும் தொகையு முணர்த்திற்றென்றும், அ-ஆ முதலியனவே பெயரென்றும், அம்முறையே முறையென்றும், முப்பஃதெனத் தொகை விதிக்கப்பட்டதென்றும் உரைத்தாராலெனின் அற்றன்று. அஃதாசிரியர் கருத்தாயின், அ-ஆ-இ-ஈ என முழுதும் எடுத்தோதி முறைக்கு ஏதுவும் கூறுவர். அவ்வாறு கூறாது அகரமுதல் னகர இறுவாயென அனுவதித்தே யொழிந்தமையானும், எழுத்தென்ப தொருபொருள் அதற்கு அ-ஆ முதலியன பெயரென்றல் பொருந்தாமையானும், அ-ஆ முதலியன அ-ஆ முதலியவற்றிற்குப் பெயராதல் கூற வேண்டாமையானும், வேண்டுமெனிற் சொற்களும் பொருளையுணர்த்தாது அவை தம்மையே உணர்த்தும்வழி அவற்றிற்கவை பெயராதல் கூறாமை குன்றக்கூறலாம் ஆகலானும், முறையும் தொகையும் செய்கை முதலியவற்றிற்குக் கருவியன்மையின் அவற்றை விதித்தலாற் பயனின்மையானும் அவருரை போலியுரை என அறிக என்பதும் அகர முதலியவற்றிற்குப் பொதுப்பெயர் கூறுதல் நுதலிற்று என்பதும்." - தொல் சூத்திரவிருத்தி.
|