நூன்மரபு

3.எண்

உயிர்மெய்க்கு அளபு

10.மெய்யோ டியையினும் உயிரியல் திரியா.

இஃது, உயிர்மெய்க்கு அளபு கூறுதல் நுதலிற்று.

மெய்யோடு இயையினும் - (உயிர்மெய்யாவன) மெய்களோடு உயிர் இயையப் பிறந்த நிலைமையவாயினும், உயிரியல் திரியா (அவ்வுயிர்மெய்கள் அவ்வியைபின் கண்ணே வேறு ஓர் எழுத்தாய் நின்றமையின், மெய்யோடு இயைபின்றி நின்ற)உயிர்களது இயல்பில் திரியா.

உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை, `மெய்யோ டியையினும்' என உயிர்மேல் வைத்துக் கூறியது, அவ்வுயிரின் மாத்திரையே இதற்கு மாத்திரையாகக் கூறுகின்றமை நோக்கிப் போலும், இயலென்றது பெரும்பான்மை மாத்திரையினை சிறுபான்மை குறியும் எண்ணும் கொள்க. க எனவும் கா எனவும் அவ்வாறு நின்றமை அறிக.

(10)