3. சார்பெழுத்துக்கள் பிறக்குமாறு

101.சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்.

இஃது, சார்பிற்றோற்றத் தெழுத்திற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.

சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல என தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்-சிலவற்றைச் சார்ந்துவரின் அல்லது தமக்குத் தாமே வரும் இயல்பு இலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட ஒழிந்த மூன்றும், தம்தம் சார்பின் பிறப்போடு சிவணி ஒத்த காட்சியில் தம் இயல்பு இயலும்- தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்களது பிறப்பிடத்தே பிறத்தலொடு பொருந்தி அவ்விடத்தே தமக்குரிய இயல்பில் நடக்கும்.

'ஒத்தகாட்சி' என்றதனான், ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பேயெனினும் தளை வளியாற் பிறத்தலின், உயிரொடு புணர்ந்த வல்லெழுத்துச் சார்பாகவே பிறக்குமென்பது கொள்க. `தம்மியல்பியலும்' என்றதனான், அளபெடையும் உயிர்மெய்யும் தமக்கு அடியாகிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்பது கொள்க.

(19)