4. எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை

102.1எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே.

இஃது, எல்லா எழுத்திற்கும் ஆவதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

எல்லா எழுத்தும் - எல்லா எழுத்துக்களும், வெளிப்பட கிளந்து சொல்லிய பள்ளி- வெளிப்பட விதந்து சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே, எழுதரு வளியின் - எழுகின்ற வளியானே, பிறப்பொடு விடுவழி - தாம் பிறக்குந் தொழிலுடையவாதலொடு தம்மைச் சொல்லும் இடத்து, உறழ்ச்சி வாரத்து அகத்து எழுவளி இசை - திரிதருங் கூற்றையுடைய உண்ணின்று எழும் வளியானாய இசையை, அரில் தப நாடி-பிணக்கமற ஆராய்ந்து, அளபின் கோடல் - மாத்திரை வரையறையாற் கோடல், அந்தணர் மறைத்து - பார்ப்பார் வேதத்துக் கண்ணது.

உறழ்ச்சி வாரம் என்றது, உந்திமுதலா எழும் வளி தலைகாறும் சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலைபெறுதலை எனக்கொள்க. வளி என்னாது வளியிசை என்றது, அவ்வாறு நெஞ்சின்கண் நிலைபெறும் அளபும் வளி எனப்படுவது பின்னை நெஞ்சினின்றும் எழுவுழியெல்லாம் வளித்தன்மை திரிந்து எழுத்தாம் தன்மையதாம் என்பது விளக்கி நின்றது.

(20)

1.எல்லா எழுத்து முதலிய இரண்டு சூத்திரமும் எழுத்துக்கள் தம் பிறப்பிற்குப் புறனடை யுணர்த்திற்றென்று ஒரு சூத்திரமாகக் கொண்டார். (நச்.)