4. எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை

103.அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே.

இஃது, மேற்சூத்திரத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

அஃதுஇவண் நுவலாது - ("அகத்தெழு வளியிசை அளபிற் கோடலாகிய") அதனை இந்நூலிடத்துச் சொல்லாது. எழுந்து புறத்து இசைக்கும்-(அகத்தினின்று) எழுந்து புறத்துப் போந்து இசைக்கும், மெய் தெரி வளி இசை அளபு - பொருண்மை தெரிகின்ற வளியானாய இசையது மாத்திரையினை, நுவன்றிசின் - யான் ஈண்டுக் கூறினேன்.

மற்று, இஃது " அளபிற் கோட லந்தணர் மறைத்து" (பிறப்பியல்-20) எனவே பெறப்பட்டதன்றோவெனின், அந்தணர் மறைத்து" என்பது பிறன்கோட் கூறுதற்கும் , பிறன்கோட் கூற்று நேர்ந்து உடம்படுதற்கும் ஒப்பக்கிடந்தமையின் அவ்வையம் தீர்தற்குக் கூறினாரென்பது. புறத்து இசைப்பதன் முன்னர், அகத்து இசைக்கும் வளியிசையை அம் மறைக்கண் ஓர் எழுத்திற்கு மூன்றுநிலை1உளதாகக் கூறும் (அதன் ஆசிரியன் ). அஃது ஆமாறு அறிந்து கொள்க. `மெய்தெரி ' என்றதனான், முற்கு முதலியன முயற்சியாற் பிறக்குமெனினும், பொருள் தெரியா நிலைமைய வாகலின் அவற்றிற்கு அளபு கூறாராயினாரென்பது பெறப்பட்டது. ` நுவன்றிசின் ' என்பது ஈண்டு இறந்த காலத்தன்மைவினை.

(21)

மூன்றாவது பிறப்பியல் முற்றிற்று.


1. நிலையும் வளியும் முயற்சியும் மூன்றும்
இயல நடப்பது எழுத்தெனப் படுமே.' (நச். மேற்கோள்.)