இஃது, மேற்கூறியவாற்றான் தனிமெய்யும் முதலாவான் சென்றதனை விலக்கலின் மாறியது விளக்கம் நுதலிற்று. அவற்றுள்-மேல் மெய்யும் உயிரும் என்று கூறிய இரண்டினுள், ஈறு மெய்யெல்லாம் புள்ளியொடு நிலையல் - மொழிக்கு ஈறாய மெய்யெல்லாம் புள்ளி பெறுதலோடு நிற்கும் ; முதலாயவையெல்லாம் புள்ளியிழந்து நிற்கும். மரம் என வரும். மொழிமுதல் மெய் புள்ளியொடு நில்லா தென்னாது, ஈறெல்லாம் புள்ளியொடு நிலையல் என ஈற்றின்மேல் வைத்துக் கூறியவதனால் அவ்வீற்றின் மெய் உயிர் முதன்மொழி வந்த இடத்து அஃது ஏற இடங்கொடுக்குமென்பது பெறப்பட்டது. (2)
|