1. மொழிகளின் முதலும் ஈறும்

குற்றுகரம் ஒற்றெழுத்தொத்தல்

106.குற்றியலுகரமும் அற்றென மொழிப.

1இஃது, ஈற்றிற் குற்றியலுகரத்திற்கு ஓர் கருவி கூறுதல் நுதலிற்று.

குற்றியலுகரமும் அற்று என மொழிப - ஈற்றிற் குற்றியலுகரமும் (புள்ளி யீறுபோல உயிரேற இடம் கொடுக்கும்) அத்தன்மைத்து என்று சொல்லுவர்.

2இம் மாட்டேறு ஒருபுடைச்சேறல் எனவுணர்க.

(3)

1. இம் மாட்டேறு ஒருபடைச் சேறல் புள்ளி பெறாமையின், அங்ஙனம் உயிரேறுங்காற் குற்றுகரம் கெட்டுப்போகநின்ற ஒற்றின் மேல் உயிரேறிற்றென்று கொள்ளற்க. நாகரிதென்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டும் கூடிநின்றல்லது அப்பொருளுணர்த்த லாகாமையின், இஃது உயிரோடுங் கூடி நிற்கும் என்றார். (நச்)

2. குற்றியலுகரமும் மெய்யீறுபோலப் புள்ளிபெறும் என்பதே போந்த பொருளாம். "மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்" "எகர ஒகரத் தியற்கையும் அற்றே" என்று ஆசிரியர் மாட்டியவிடத்தும் எகர ஒகரம் புள்ளி பெறுமென்பதே கருத்தாதல் தெளிவாம். ஆதலால், இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் குற்றியலுகரம் புள்ளியீறுபோல உயிரேற இடம் கொடுக்குமென்று உரை கூறுவது மாட்டேற்றுக்கு முற்றிலும் பொருந்தாது.இதுவே பேராசிரியர்க்கும் சிவஞானமுனிவர்க்கும் சங்க யாப்புடையார்க்கும் கருத்தாம். "தொல்லை வடிவின புள்ளி" என்னும் நன்னூல் நூற்பாவுரையில் "ஆண்டு என்ற மிகையானே... குற்றுகர குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க". என்று மயிலைநாதர் கூறுவதும் காண்க.(பாவாணர்)