1. மொழிகளின் முதலும் ஈறும்

உயிர்மெய் யீறு உயிரீற்றது

107.உயிர்மெய் யீறு உயிரீற் றியற்றே

இஃது, மேல் "மெய்யே யுயிரென் றுயீரியல" (புணரியல் - 1) என்றதற்கு ஓர் புறனடை கூறுதல் நுதலிற்று.

உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்று- உயிர்மெய் மொழியீற்றில் நின்றதுவும் உயிரீற்றின் இயல்பையுடைத்து-இடையில் நின்றதுவும் உயிரீற்றின் இயல்பையுடைத்து-இடையில் நின்றதுவும் உயிரின் இயல்பையுடைத்து.

ஈறும் இடையும் உயிருள் அடங்குமெனவே, முதல் மெய்யுள் அடங்கும் என்பதாயிற்று.

இதனால், விள முதலிய உயிர்மெய் ஈறெல்லாம் அகரவீறு முதலிய உயிரீற்றுள் அடங்கிப் புணர்ச்சிபெறுவன வாயின. வரகு என்புழி இடைநின்ற ரகர உயிர்மெய் அகரமாய் உயிர்த்தொடர் மொழி யெனப்பட்டது.

ஈண்டு உயிர்மெய் ஒற்றுமை நயத்தான் உயிர்மெய்யென வேறு ஓர் எழுத்தாவதன்றி, ஈறும் இடையும் உயிரென ஓரெழுத்தாயும் முதல் மெய்யென ஓரெழுத்தாயும் நின்றதாயிற்று.

இத்துணையும் ஒரு மொழி யிலக்கணங் கூறலின் மொழிமரபின் ஒழிபாயிற்று.

(4)