இஃது, மேற்கூறும் புணர்ச்சி மும்மொழிப் புணர்ச்சியாகாது, இரு மொழிப்புணர்ச்சி யாமென்பதூஉம், அவை எழுத்துவகையான் நான்காமென்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும் - உயிரீற்றுச் சொல்முன் உயிர்முதல்மொழி வரும் இடமும்; உயிர் இறு சொல்முன் மெய் வரு வழியும்- உயிரீற்றுச் சொல்முன், மெய்ம் முதல் மொழிவரும் இடமும், மெய் இறு சொல்முன் உயிர்வரு வழியும்-மெய்யீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் மெய் வரு வழியும்-மெய்யீற்றுச் சொல்முன் மெய்ம்முதல் மொழி வரும் இடமும், இவ் என அறிய- (அப் புணர்ச்சிவகை) இவையென அறிய, கிளக்கும் காலை-ஆசிரியர் சொல்லுங்காலத்து, நிறுத்த சொல் குறித்து வரு கிளவி என்று அ ஈர் இயல-இவை நிறுத்த சொல்லும் அதன் பொருண்மையைக் குறித்துவரும் சொல்லுமாகிய அவ்விரண்டு இயல்பையுடைய, புணர்நிலைச் சுட்டு-புணரும் நிலைமைக்கண். எ-டு ; ஆஈ, ஆ வலிது, ஆல் இலை. ஆல் வீழ்ந்தது எனக் கண்டு கொள்க. விளவினைக் குறைத்தான் என்பது அவ்வுருபு குறித்துவரு கிளவியை நிலைமொழியுள் அடக்கி இருமொழிப்புணர்ச்சியாய் நின்றவாறு அறிக. (5)
|