இஃது, மேற்கூறிய திரிபு மூன்றும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. அவைதாம் - அத் திரிபுதான், மெய்பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று இவ் என மொழிப திரியும் ஆறு- மெய்பிறிதாதலும் மிகுதலும் குன்றலுமாகிய இவை எனச் சொல்லுவர் திரியும் நெறியினை, இம் மூன்றும் அல்லாதது இயல்பென்று கொள்க. எ - டு: பொற்குடம், யானைக்கோடு, மரவேர் என வரும். குவளை மலர் என்பது இயல்பு. இப் புணர்ச்சி நான்கும் ஒரு புணர்ச்சிக்கண்ணே நிகழ்வு பெறுமென்பது உரையிற்கொள்க. மேல் ` இடம் ' (புணரியல் - 6) என்றதனால் , ஒரு புணர்ச்சிக்குத் திரிபு மூன்றனுள் ஒன்றாயினும் இரண்டாயினும் மூன்றாயினும் வரப்பெறும் எனக்கொள்க. ` மகத்தாற் கொண்டான் ' என்பது அம்மிகுதி இரண்டு வந்தது. ` நீயிர் குறியிர் ' என்பது அம்மிகுதி மூன்று வந்தது. பிறவும் அன்ன. (7)
|