இஃது, "நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி" (புணரியல்-5) என்பதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. " நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் - நிலைமொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்து வரு சொல்லும் அடையொடு தான்றினும் புணர்நிலைக்கு உரிய - (தாமே வந்து புணர்வதன்றி) அவையிரண்டினும் ஓரோர் சொல்லடை வந்து ஒன்றித்தோன்றினும் புணர்நிலைக்கு உரிய. (எ-டு) பதினாயிரத்தொன்று, ஆயிரத்தொருபஃது, பதினாயிரத்தொருபஃது எனவரும். ஈண்டு அடையென்றது உம்மைத் தொகையினையும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினையும1 என வுணர்க. அவை யல்லாத தொகைகளுள் வினைத்தொகையும். பண்புத்தொகையும் பிளந்து முடியாமையின் ஒருசொல் எனப்படும். அன்மொழித் தொகையும் தனக்கு வேறு ஓர் முடிபு இன்மையின். ஒருசொல் எனப்படும். இனி ஒழிந்த வேற்றுமைத்தொகையும் உவமைத் தொகையும் " தன்னின முடித்தல் " என்றதனான் ஈண்டு ஒருசொல் என்ப்படும். உண்டசாத்தன் வந்தான், உண்டுவந்தான் சாத்தன் என்பனவும் அவ்வாறே ஒருசொல் எனப்படும். பிறவும் அன்ன. (8)
1.பன்னிரண்டுகண் என்னும்போது, பன்னிரண்டு என்பது பத்தும் இரண்டும் எனப் பொருள்படுவதால் உம்மைத் தொகை. பதினாயிரத்தொன்று என்னும்போது, பதினாயிரம் என்பது பத்தாகிய ஆயிரம் எனப் பொருள்படுதலின் பண்புத்தொகையாம். ஆனால், இருபெயரொட்டுப் பண்புத் தொகையன்று. இருபெயரொட்டாயின் பத்து ஆயிரம் என்னும் சொற்கள் தனித்தனி நின்றும் ஒரு பொருளே யுணர்த்தல் வேண்டும். அங்ஙனம் உணர்த்தாமையும், பனைமரம் என்னும் இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் இரு சொல்லும் தனித்தனி ஒரே பொருளை உணர்த்துவதையும் நோக்குக. மரக்கிளை என்னும் வேற்றுமைத் தொகை மரம்+கிளை என்றும், முத்துப்பல் என்னும் உவமைத்தொகை முத்து+ பல் என்றும் பிளந்து முடிதல் காண்க. செந்தாமரை என்னும் பண்புத்தொகையும், கொல்களிறு என்னும் வினைத்தொகையும் திட்டமாக அல்லது தெளிவாக இரு சொல்லாய்ப் பிளந்து முடியாமையும் ஒரு சொற்றன்மைப்பட்டு நிற்றலும் காண்க. அன்மொழித் தொகை என்றும் வெளிப்படாத சொல்லாய் ஏனைத்தொகைகளின் ஈற்றில் பிறத்தலானும் ஒரு சொற்றன்மைப்பட்டு நிற்றலானும் ஒரு சொல்லாம். உண்டசாத்தனாய் வந்தான். உண்டு வந்தவனாகிய சாத்தன் எனப்பொருள்படும்போது இவை ஒரு சொற்றன்மைப்படும் (பாவாணர்.)
|