2. புணர்தலின் இயல்பு

மரூஉ மொழிப் புணர்ச்சி

112.மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே.

இஃது, இலக்கண வழக்கேயன்றி மரூஉக்களும் புணர்க்கப்படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

மருவின் தொகுதி மயங்கு இயல் மொழியும் - (இலக்கண வழக்கேயன்றி) மரூஉத்திரளாகிய தலைதடுமாறாக மயங்கின இயல்பையுடைய இலக்கணத்தொடு பொருந்தின மரூஉவழக்கும். உரியவை உள புணர் நிலைச் சுட்டு - உரியன உள புணரும் நிலைமைக்கண்.

எ - டு: மீகண், முன்றில் என வரும்.

'நிலை' என்றதனான் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கல்லா மரூஉவழக்கும். புணர்க்கப்படும் எனக்கொள்க.

(9)