இஃது,நால்வகைப்புணர்ச்சியுள் மிக்கபுணர்ச்சி இத்தன்மைத்தென்பதூஉம், அந் நால்வகைப்புணர்ச்சியும் வேறோராற்றான் இருவகையாமென்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் - வேற்றுமையது பொருண்மையினைக் குறித்த புணர் மொழியது நிலைமையும், வேற்றுமை அல்வழி புணர்மொழி நிலையும் - வேற்றுமையல்லாத அல்வழியிடத்துப் புணர்மொழியது நிலைமையும், எழுத்து சாரியை அ இரு பண்பின் ஒழுக்கல் வலிய - (மிக்க புணர்ச்சிக்கண்) எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டு இலக்கணத்தானும் நடாத்துதலைத் தமக்கு வலியாகவுடைய, புணரும்காலை - அவை புணருங்காலத்து. எ - டு: விளங்கோடு, மகவின்கை, விளக்குறிது, பனையின்குறை எனக் கண்டுகொள்க. 'ஒழுக்கல் வலிய' என்றதனான், எழுத்தும் சாரியையும் உடன் பெறுதல் கொள்க. அவற்றுக்கோடு, கலத்துக்குறை என வரும். அல்வழி முற்கூறாதது வேற்றுமையல்லாதது அல்வழியென வேண்டலின் என்பது முன்னே `புணர்மொழி' என்று வைத்து, `புணருங்காலை' என்றதனாற் புணர்ச்சிக்கண்ணே வேற்றுமை அல்வழி என இரண்டாவது, அல்லாக்கால், வேற்றுமையெனவே படுமென்பது கொள்க. ஈண்டு அல்வழி யென்றது பெரும்பான்மையும் எழுவாயினை. (10) |