இஃது, மேல் வேற்றுமை யென்னப்பட்ட அவற்றது பெயரும், முறையும், தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. ஐ ஒடு கு இன் அது கண் என்னும் - ஐ ஒடு கு இன் அது கண் என்று சொல்லப்படும், அஆறு என்ப வேற்றுமை உருபு - அவ்வாறும் என்று சொல்லுவர் வேற்றுமை யுருபுகளை. இவ்வாறும் அல்லன வெல்லாம் அல்வழி எனப்படும். அவை எழுவாயும், விளியும், உவமத்தொகையும், உம்மைத்தொகையும், பண்புத் தொகையும், இருபெயரொட்டுப் பண்புத்தொகையும், முற்றும், இருவகை எச்சமும், இடையும், உரியும் என இவை. (11)
|