3. உருபு புணர்ச்சி

வலிமுதலுருபு புணருநிலை

115.வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்கு
ஒல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும்.

இஃது, நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கிற்றோர் கருவி உணர்த்துதல் நுதலிற்று.

வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு - வல்லெழுத்து முதலாகவுடைய வேற்றுமை யுருபிற்கு, ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும் - பொருந்தின இடத்து வல்லொற்றாயினும் மெல்லொற்றாயினும் இடைக்கண் மிகுதல் வேண்டும்.

எ - டு: ஊர்க்கு , நீர்க்கு, ஊர்க்கண், நீர்க்கண் என வல்லெழுத்து மிக்கன. தங்கண், எங்கண் என மெல்லெழுத்து மிக்கன.

'ஒல்வழி' என்றதனால், அரசர்கண், பார்ப்பார்கண் என ஒற்று மிகா தனவும் கொள்க. "மெய்பிறிதாதல்" (புணரியல்-7) முதலாய நான்கு புணர்ச்சியும் உருபு புணர்ச்சிக்கண்ணும் எய்தலின், மெய் பிறிதாதலை எடுத்தோதாது மிக்கதனை எடுத்தோதிய வதனான், மிக்க புணர்ச்சி யல்லனவும் ஈண்டே கொள்க. பொற்கு, பொற்கண், ஆங்கண், ஈங்கண், ஊங்கண், அவற்கு, இவற்கு, நுங்கண், கொற்றற்கு, சாத்தற்கு என வரும்.

அவன்கண், சாத்தன்கண் என்புழி இயல்பும் இதனானே கொள்க.

(12)