இஃது, ஆறாவதற்குத் தொகைமரபினை நோக்கியதோர் கருவி கூறதல் நுதலிற்று. ஆறன் உருபின் அகரக்கிளவி- ஆறாம் வேற்றுமையாகிய அது என்னும் சொல்லிடத்து அகரமாகிய எழுத்து, ஈறு ஆகு அகரமுனை கெடுதல் வேண்டும் - [நெடுமுதல் குறுகும்] மொழியீற்று உளதாகின்ற அகரத்தின் முன்னர்த் தான் கெடுதல் வேண்டும். எ - டு: நமது, எமது, தனது, எனது, நினது என வரும். மேல் ஈறாகு அகரம் இதற்குத் தாராது, இவ்வுருபகரமே ஏறி முடிய அமைதலின், அது கேடாதல் வேண்டா எனின், நெடுமுதல் குறுகி விகாரப்பட்டு நின்ற மொழியாதலின் அதன்மேல் உருபகர மேறி முடியல் வேண்டா ராயினார் போலுமென்பது.1 (13)
1.இது நிலைமொழிக்கு ஓர் அகரம் பெறுமென விதியாது உருபு அகரம் ஏறிமுடியுமென விதித்தால் வரும் குற்றம் உண்டோ எனின் ? `நினவ கூறுவ வெனவ கேண்மதி' (புறம் 35) என்றாற் போல ஆறாவதற்குரிய அகர உருபின் முன்னரும் ஓர் அகர எழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாகக் கருதினாராதலின், ஆறனுருபிற்கும் நான்கன் உருபிற்கும் பொதுவாக நிலைமொழிக்கண் அகரப்பேறு விதித்து அது வென்னும் ஒருமையுருபு வந்தால் ஆண்டுப் பெற்று நின்ற அகரத்தின் முன்னர் அது வென்பதன்கண் அகரங்கெடுகவென்று ஈண்டுக் கூறினாராதலின், அதற்கும் குற்றம் உண்டென்று உணர்க. (நச்.)
|