இஃது, வேற்றுமையுருபு பெயர்க்கண் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. வேற்றுமை பெயர் வழிய புணர் நிலை-வேற்றுமை பெயர்களின் பின்னிடத்தன அவற்றோடு புணரும் நிலைமைக்கண். எ - டு: சாத்தனை, சாத்தனொடு என வரும். மேல் 1"உருபுநிலை திரியாது ஈறுபெயர்க் காகும்" (வேற்றுமையியல்-8) என்கின்றாரன்றோ வெனின், பெயரொடு பெயர் முதலிய நால்வகைப் புணர்ச்சியையும் வேற்றுமை அல்வழியென இரண்டாக அடக்கலின், வினைவழியும் உருபு வருமென்பதுபட நின்றதாகலின் ஈண்டு இது கூறப்பட்டது. (14)
1."உருபுநிலை திரியா தீறுபெயர்க் காகும்" என்பதை யுள்ளிட்ட சூத்திரத்தையும் அதன் உரையையும் எடுத்துக்காட்டையும் இதனடியிற் காண்க. " கூறிய முறையி னுருபுநிலை திரியாது ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப."
(சொல்-வேற்றுமையியல்,8.) இது, உருபேற்றலும் பெயரதிலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. மேல் அவைதாம் பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்றோதிய முறையாற் கிடந்த வுருபு முறைமையிற் றிரியாதே, பெயரதிற்றுக்கண் வந்து நிற்றல் இயல்பு என்றவாறு. எ - டு: சாத்தனை, சாத்தனோடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் எனவரும், நிலைதிரியா தென்றது இவை இடைச் சொல்லாகலால் தம் ஈறு திரிதலென்னும் இலக்கணமுடைய கொல்லோவெனின்:- அவை யில வென்றற்குக் கூறினான் என்பது. அன்றியும் முன்னர் வேற்றுமை மயங்கியலுள் "கு, ஐ, ஆவென வரூஉம் இறுதி அ ஒடு சிவணும்" என்ற செய்யுட்கண் திரிபு கூறுபவாகலானும் அது சொல்லினார்.
|