3. உருபு புணர்ச்சி

பெயர்களின் பெயர், முறை , தொகை

118.உயர்திணைப் பெயரே, அஃறிணைப்பெயரென்
றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே.

இஃது, வேற்றுமையோடும் புணரும் பெயர்கட்குப் பெயரும், முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

உயர்திணைப்பெயரே அஃறிணைப்பெயர் என்று அ இரண்டு என்ப- உயர்திணைப்பெயரும் அஃறிணைப்பெயருமாகிய அவ்விரண்டுமென்று சொல்லுப, பெயர் நிலை சுட்டு- பெயராகிய நிலைமையது கருத்தினை.

எ - டு:ஆடூஉ, மகடூஉ என்பன உயர்திணைப்பெயர். ஒன்று பல என்பன அஃறிணைப்பெயர்.

மற்ற விரவுப்பெயர் கூறாராயது என்னை யெனின்,மற்றது சாத்தன் வந்தான்; வந்தது ; எனப் புணர்ச்சிக்கண் பெரும்பான்மையும் ஒரு திணைப்பாற் படுதலின், அவ்விரண்டாக அடக்கிக் கூறினாரென்பது.

(15)