4. சாரியைப் புணர்ச்சி

சாரியைகளின் பெயரும் முறையும் தொகையும்

120.அவைதாம்
இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன்னென் கிளவி உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே.

இஃது, சாரியைகட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

அவைதாம் - மேற்சாரியை யென்னப்பட்டவைதாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன் என் கிளவி உளப்பட பிறவும்- இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன் என்னும் சொல்லுமாகிய அவ் வொன்பதும் உளப்படப் பிறவும் , அன்ன என்ப சாரியை மொழி - அச் சாரியையாம் தன்மைய என்று சொல்லுவர் சாரியையாகிய மொழிகளை.

1 `பிறவும்' என்றதனால்,தம், நும், எம், கெழு, ஏ, ஐ, ஞான்று என்பனவுங் கொள்க. `எடுத்த நறவின் குலையலங் காந்தள்' என்புழி `அலம்' என்பதோர் சாரியையும் உண்டாலெனின், அதனை `அலங்கு காந்தள் என்பதன் விகாரமென்ப. இன்சாரியை வழக்குப் பயிற்சியானும் நூலுட்பலகாலும் எடுத்தோதப்படலானும், வாளா ஓதிய வழி தானே சேறலானும் முன்வைக்கப் பட்டது. அன்சாரியையும் அது போலச் சிறப்புடைமையின் பின் வைக்கப்பட்டது. இடை நின்றவற்றியல்பும் அறிந்துகொள்க.

(17)

1.பிறவாவன தம், நம், நும்,உம் ,ஞான்று, கெழு, ஏ, ஐ என்பனவாம். இவற்றுள் ஞான்று ஒழிந்தன எடுத்து ஓதுவர் ஆசிரியர், ` எடுத்த நறவின் குலையலங் காந்தள்' (கலி.40) இது வினைத்தொகை; சாரியை அன்று, இன்சாரியை வழக்குப் பயிற்சியும் பலகால் எடுத்தோதப் படுதலும் பொதுவகையான் ஓதியவழித்தானே சேறலுமாகிய சிறப்பு நோக்கி முன்வைத்தார். வற்றும் அத்தும் இன்போல முதல் திரியுமாக லானும், செய்கை ஒப்புமையானும் அதன்பின் வைத்தார். அம் ஈறுதிரியுமாதலின் திரிபுபற்றி அதன்பின் வைத்தார். ஒன் ஈறு திரியுமேனும் வழக்குப் பயிற்சியின்றி நான்காம் உருபின்கண் திரிதலின் அதன்பின் வைத்தார்.ஆன் பொருட் புணர்ச்சிக்கும் உருபு புணர்ச்சிக்கும் வருமென்று அதன்பின் வைத்தார். அக்கு ஈறு திரியுமேனும் உருபு புணர்ச்சிக்கண் வாராமையின் அதன்பின் வைத்தார் இக்கு முதல் திரியுமேனும் சிறுபான்மைபற்றி அதன்பின் வைத்தார். அன் இன் போலச் சிறத்தலிற் பின் வைத்தார்.

ஆனுருபிற்கும் ஆன்சாரியைக்கும் இன்னுருபிற்கும் இன்சாரியைக்கும் வேற்றுமை யாதெனின்,அவை சாரியையான இடத்து யாதானும் ஓர் உருபேற்று முடியும்; உருபாயின இடத்து வேறோர் உருபினை ஏலாவென்று உணர்க. இனி, மகத்துக்கை என்புழித் தகர ஒற்றுந் தகர வுகரமும் வருமென்று கோடுமெனின் இருளத்துக் கொண்டான் என்றால் அத்து எனவே வேண்டுதலின் ஆண்டும் அத்து நின்றே கெட்டதென்று கோடும். அக்கு இக்கு என்பனவும் பிரித்துக் கூட்டக் கிடைக்கும். தாழக்கோலென அக்குப் பெற்று நிற்றலானும் ஆடிக்கு என்புழிக் குகரம் நான்கனுருபாகாமையானும் இவை சாரியையாமாறு உணர்க. (நச்.)