4. சாரியைப் புணர்ச்சி

சாரியைக்குப் புணர்ச்சி விதி

121.அவற்றுள்
இன்னின் இகரம் ஆவின் இறுதி
முன்னர்க் கெடுதல் உரித்து மாகும்.

இஃது, அவற்றுள் - மேற்கூறப்பட்ட சாரியைகளுள், இன்னின் இகரம் ஆவின் இறுதி முன்னர், கெடுதலும் உரித்தாகும் - கெடாமையேயன்றிக் கெடுதலும் உரித்தாம்.

எ - டு: ஆனை, ஆவினை, ஆன்கோடு, ஆவின்கோடு1 என வரும்.

'முன்னர்' என்றதனான், `மா' என்னும் சொல்லின் முன்னும் அவ்விரு விதியும் எய்தும். மானை, மாவினை, மான்கோடு, மாவின்கோடு என வரும்.

(18)

1. ஆன்கோடு... ...மாவின்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழியுங் கொள்க.(நச்.)