4. சாரியைப் புணர்ச்சி

இன் சாரியை ஈறு திரியுமிடம்

122.அளபாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை
னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே.

இஃது, இன்இறுதி திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அளபாகும் மொழி முதல் -அளபுப் பெயராகும் மொழி முதற்கண், நிலைஇய உயிர்மிசை னஃகான் - நிலைபெற்ற உயிருக்குமேலாய் நின்ற இன்சாரியையது னகாரம், றஃகான் ஆகிய நிலைத்து - றகாரமாகிய நிலைமைத்து.

பதிற்றகல், பதிற்றுழக்கு என்புழி அவ்வாறு வருதல் அறிக.

'நிலைத்து' என்றதனால், பிறவழியும் இன்னின் னகரம் றகர மாதல் கொள்க.

எ - டு: பதிற்றொன்று, பதிற்றேழு என வரும்.

(19)