4. சாரியைப் புணர்ச்சி

வற்று முதல் கெடுதல்

123.வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன்
அஃகான் நிற்றல் ஆகிய பண்பே.1

இஃது, வற்று முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

சுட்டு முதல் ஐமுன் - சுட்டெழுத்தினை முதலாக வுடைய ஐகார ஈற்றுச் சொல் முன்னர் , வஃகான் மெய் கெட அஃகான் நிற்றல் ஆகிய பண்பு - வற்றுச்சாரியை தன் வகரமாகிய மெய்கெட அகரம் நிற்றலாகிய பண்பினையுடைய.1

அவையற்றை இவையற்றை உவையற்றை2 எனவும், அவையற்றுக்கோடு எனவும் வரும்.

'ஆகிய பண்பு' என்றதனால், சுட்டு முதலாகிய ஐ என் இறுதி ஐகாரத்தோடு நில்லாதவழி, வற்றின் வகரம் அகரம் நிற்கக் கெடாதுவற்றாயே நிற்றல் கொள்க. மற்றிது " திரிந்ததன்றிரிபு பிறிது" என்னும் நயத்தாற் கெடாதே நிற்குமாதலின், இது கூற வேண்டா எனின், சுட்டு முதல் ஐ ஈற்றுச் சொல்லின் ஐ முன் என ஓதாது. `சுட்டு முதல் ஐம்முன்' என அச் சொல்முன் எல்லாம் கெடுவதுபோல ஓதினமையின், வேண்டிற்றென்பது.

(20)

1. ஆகிய பண்பு என்றதனானே எவனென்பது படுத்தலோசையாற் பெயராயவழி எவன் என நிறுத்தி வற்றும் உருபும் கொடுத்து வற்று மிசை யொற்றென்று னகரங்கொடுத்து அகரவுயிர் முன்னர் வற்றின் வகரம் கெடுமெனக் கெடுத்து எவற்றை, எவற்றொடு என முடிக்க. (நச்.)

2. வற்றுச் சாரியையை நன்னூலார் அற்றுச் சாரியை என்பர். (பாவாணர்.)

3. எவன் என்பது படுத்தலோசையாற் பெயராகும். எனவே, எடுத்த லோசையால் வினாவினைக் குறிப்பாகும் என்பதாம் (பாவாணர்.)