4. சாரியைப் புணர்ச்சி

பொருட்புணர்ச்சியில் ஆன் ஈறு திரிதல்

125.ஆனினகரமும் அதனோ ரற்றே
நாள்முன் வரூஉம் வல்முதற் றொழிற்கே.

இஃது , ஆன்சாரியை பொருட்புணர்ச்சிக்கண் ஈறு திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நாள்முன் வரும் வல் முதல் தொழிற்கு ஆனின் அகரமும் - நாட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாக வுடைய வினைச்சொற்கண் வரும் ஆன்சாரியையின் அகரமும், அதன் ஓர் ஒற்று - அந் நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியையோடு ஒரு தன்மைத்தாய் னகாரம் றகாரமாம்.

'தொழிற்கு' என்பதனைத் `தொழிற்கண்' ஆனினகரம் என மயக்கமாகக் கொள்க.

எ - டு: பரணியாற் கொண்டான் என வரும்.

உம்மைய இரட்டுற மொழிதலானே எதிரது தழீஇய தாக்கி, அதனால் நாளல்லவற்றுமுன் வரும் வன்முதற்றொழிற்கண் இன்னின் னகரமும் றகாரமாய்த் திரிதல் கொள்க. பனியிற் கொண்டான் என வரும்.

தொழிற்கண் இன்னின் னகரம் திரியுமென, பெயர்க்கண் இன்னின் னகரம் திரிதலும் திரியாமையுமுடைய வென்பது ஞாபகத்தாற்1 கொள்ளப்படும். பறம்பிற் பாரி, வண்டின் கால் என வரும்.

(22)

1.ஞாபகம் - ஞாபகம் கூறல் என்னும் உத்தி. அஃதாவது நூற்பாவைச் சொற்சுருங்கவும் பொருள் விளங்கவும் செய்யாது அரிதும் பெரிதுமாகச் செய்து அதனால் வேறுபல பொருளுணர்த்தல்.

(பாவாணர்)