4. சாரியைப் புணர்ச்சி

அக்கு அகரம் நிற்க ஏனைய கெடுமாறு

129.எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி
அக்கின் இறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே
குற்றிய லுகரம் முற்றத்தோன் றாது.

இஃது, அக்கீறு திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) எ பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்றத் தோன்றாது - எவ்வகைப் பட்ட பெயர் முன்னும் வல்லெழுத்து வருமிடத்து அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முடியத் தோன்றாது, மெய்மிசையோடும் கெடும் - அதனாற் பற்றப்பட்ட வல்லெழுத்தாகிய மெய் தனக்கு மேல்நின்ற மெய்யோடும் கெடும்.

எ - டு: குன்றக் கூகை, மன்றப்பெண்ணை, ஈமக்குடம், அரசக்கன்னி, தமிழக்கூத்து என வரும்.

['முற்ற' என்றதனால் வன்கணமன்றி மற்றக் கணங்கட்கும் கொள்க.] தமிழநூல், தமிழயாப்பு, தமிழவரையர் எனவரும்.1

(26)

.இன்னும் இதனானே தமக்கேற்ற இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடித்துக்கொள்க. அன்றிக் கேடாதிய ககரவொற்று நிற்குமெனின், சகரந் தகரம், பகரம் வந்தவற்றிற்குக் ககரவொற்றாகாமை உணர்க.