நூன்மரபு

3.எண்

மகரக் குறுக்கம்

13.அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகுந் தெரியுங் காலை.

இஃது, மெய்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று.

அரை அளபு குறுகல் மகரம் உடைத்து - அரையளபாகிய எல்லையிற் குறுகிக் கான்மாத்திரையாதலை மகர மெய் உடைத்து; (அஃது யாண்டோவெனின் ) இசையிடன் அருகும். வேறு ஓர் எழுத்தினது ஒலியின்கண் அது சிறுபான்மையாகி வரும், தெரியுங்காலை - ஆராயுங்காலத்து.

எ - டு: போன்ம், வரும் வண்ணக்கன் என வரும் , கான் மாத்திரை யென்பது உரையிற்கோடல்.

(13)