இஃது, அம்மின் இறுதி திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) அம்மின் இறுதி க ச த க் காலை - அம்மின் இறுதி யாகிய மகரவொற்று க ச த க் கள் வருமொழியாக வந்த காலத்து, தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும் - தன் வடிவு திரிந்து ங ஞ ந க்களாம். எ - டு: புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல் என வரும். தன்மெய் என்றதனால், அம்மின் இறுதி மகரமேயன்றி, தம் நம் நும் உம் என்பனவற்றின் இறுதி மகரமும் திரியுமென்பது கொள்க.1 எல்லார் தங்கையும், எல்லார் நங்கையும், எல்லீர் நுங்கையும் வானவரி வில்லுந் திங்களும் என வரும். (27)
1.முன்னும் பின்னும் சாரியைப் பேறு கூறுவார் சாரியை பெறாது விகாரப்படு மொழிகளை இச் சூத்திரத்தால் தோன்ற இடையே கூறியது இப்பொதுப்பெயர்களே. இங்ஙனம் தம், நம், நும் எனக் கூறிய சாரியை இடைச்சொல்லுமாயின என உய்த்துணர்தற்கென்க என்பது நன்னூல் விருத்தி. (சூ. 247)
|