4. சாரியைப் புணர்ச்சி

இன்சாரியை முழுதும் கெடுமிடம்

132.இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்கு
இன்னென சாரியை இன்மை வேண்டும்.

இஃது, இன் சாரியை முழுவதூஉம் கெடும் இடம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) இன்என வரும் வேற்றுமை உருபிற்கு - இன் என்று சொல்ல வருகின்ற வேற்றுமையுருபிற்கு, இன் என் சாரியை இன்மை வேண்டும் - இன் என்னும் சாரியைதான் இன்றி முடிதல் வேண்டும்.

விளவின் , பலாவின் என வரும்.

"அவற்றுள் இன்னின் இகரம்" (புணரியல் 18) என்றதன்பின் வையாததனால், சிறுபான்மை இன் சாரியை கெடாது நிற்றல் கொள்க. பாம்பினிற் கடிது தேள் என வரும்.

(29)