இஃது, சாரியைகட்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப-பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க் கூடியும் இசைப்ப, வேற்றுமை உருபு நிலை பெறு வழியும் -வேற்றுமை யுருபு தொகாது நிலை பெற்ற இடத்தினும், தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும்- அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக் கண்ணும், 1.ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி - தாம் தாம் பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கோடு பொருந்தி, சொல் சிதர் மருங்கின் - சாரியை பெறும் புணர்மொழிகளை பிரித்துக் காணுமிடத்து, வழி வந்து விளங்காது இடைநின்று இயலும் - அவற்றின் பின் வந்து விளங்காது அவற்றிடையே நின்று நடக்கும், சாரியை இயற்கை- சாரியையின். இயல்பு, உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்-அவைதாம் உண்டாதலும் இல்லையாதலும் ஒடு உருபினிடத்து ஒக்கும். எ - டு: விளவினைக் குறைத்தான், விளவினைக் குறைத்தவன் எனவும், நிலாத்துக்கொண்டன், நிலாத்துக்கொண்டான் எனவும் வரும். ஒட்டுதற்கொழுகிய வழக்கன்மையின், நிலாக்கதிர் நிலா முற்றம் என்பன சாரியை பெறாவாயின. எல்லா நம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின், இடைநின்றியறல் பெரும்பான்மை யெனக் கொள்க. பூவினொடு விரிந்த கூந்த லெனவும், பூவொடுவிரிந்த கூந்தலெனவும் உடைமையும் இன்மையும் ஓடுவயின் ஒத்தவாறு. ` இயற்கை ' என்றதனான் ஒடுவுருபின்கண் சாரியை பெறுதலும், பெறாமையும் ஒழிய, ஒரோவழிப் பெற்றே வருமென்பது கொள்க. பலவற்றோடு என வரும். (30)
1.ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கு - சாரியை பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கு. இந்நூற்பாவிற்கு, பெயரும் பெயரும், பெயரும் வினையும் வேற்றுமை விரியில் இருசொல்லாய்ப் பிரிந்திசைக்கும் என்றும், வேற்றுமைத் தொகையில் ஒருசொல்போல் ஒருங்கிசைக்கும் என்றும் பொருள் கொள்வர் நன்னூலாருள்ளிட்ட ஆசிரியர் சிலர். (பாவாணர் )
|