4. சாரியைப் புணர்ச்சி

அத்து வற்று வருமிடத்து நிகழும் விகாரம்

134.அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்
ஒற்றுமெய் கெடுதல் தெற்றென் றற்றே
அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே.

இஃது, அத்தும் வற்றும் வருமிடத்து நிலைமொழியினும் வருமொழியினும் வருஞ் செய்கை கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அத்தே வற்றே அ இருமொழிமேல் ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்று - அத்தும் வற்றுமாகிய அவ்விருமொழி மேல்நின்ற எழுத்து ( ஒற்று) த் தன் வடிவு கெடுதல் தெளியப்பட்டது. அவற்றுமுன்வரும் வல்லெழுத்து மிகும் - அவ்விருசாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிகும்.

எ - டு: கலத்துக்குறை, அவற்றுக்கோடு என வரும்.

கலன் என, னகாரமாக நிறுத்திக் கெடுக்கவே, `ஒன்றின முடித்தல்' என்பதனால், புள்ளியீறல்வழி விகாரவசையான் நின்றனவும் அவற்றின் மிசையொற்றென்று கெடுக்கப்படுமெனக் கொள்க.

அவற்றுக்கோடு என வரும். இஃது ஐகார ஈறு.

ஈண்டு வல்லெழுத்து மிகுமென்றது, ஈற்றுவல்லெழுத்தின்றித்திரிந்து முடியும் னகரமும் ணகரமும் லகரமும் ளகரமும் என இவற்றை நோக்கி யெனவுணர்க.

அத்து முற்கூறிய முறையன்றிக் கூற்றினான், அத்தின்மிசை யொற்றுக் கெடாது நிற்கவும் பெறும். விண்ணத்துக்கொட்கும் வெயிலத்துச் சென்றான், இருளத்துக்கொண்டான் என வரும்.

` மெய் ' என்றதனால், அத்தின் அகரம் பிறவுயிரின்முன்னும் கெடுதல் கொள்க. அண்ணாத்தேரி என வரும்.

` தெற்று ' என்றதனால், அத்தின் அகரம் கெடாது நிற்றலும் கொள்க. விளவத்துக்கண் என வரும்.

(31)