6. உயிரெழுத்தின் புணர்ச்சி இயல்புகள்

உயிர் பிரிந்த மெய்யின் இயல்பு

140.மெய்யுயிர் நீங்கின் தன்னுரு வாகும்.

இஃது, புணர்ச்சியிடத்து உயிர்மெய் உயிர்நீங்கியவழிப் படுவதோர் விதி கூறுதல் நுதலிற்று1

(இ-ள்) மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும் - மெய்தன்னொடு கூடிய உயிர் புணர்ச்சிடத்து நீங்கியவழித் தன் புள்ளி வடிவு பெறும்.

எ - டு: அதன் ஐ2 என வரும்.

(37)


1. இவ் வியல்பு ஒன்றென முடித்தல் என்னும் உத்தியால் குற்றியலுகரத்திற்கும் ஏற்கும். (பாவாணர்)

2. உயிர் இன்ன வடிவிற்றென்று ஆசிரியர் கூறாமையின் உயிர்க்கண் ஆராயச்சி யின்று. இனி, எகர ஒகரங்களைப் புள்ளியான் வேற்றுமை செய்தலின், தொன்று தொட்டு வழங்கினவடிவுடைய என்று கோடலுமாம். புணர்ச்சியுள் உயிர்மெய்யினைப் பிரிப்பாராதலின் இது கூறாக்காற் குன்றக் கூறலாம் என்று உணர்க.( நச்.)