6. உயிரெழுத்தின் புணர்ச்சி இயல்புகள்

உடம்படு மெய் தோன்றும் இடம்

141.எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்.

இஃது, உயிரீறு உயிர்முதன் மொழியோடு புணரும்வழி நிகழ்வதோர் கருவி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) எல்லா மொழிக்கும் - மூவகைப்பட்ட மொழிக்கும், உயிர் வரு வழி - உயிர் முதன்மொழி வரும் இடத்து, உடம்படு மெய்யின் உருபு கொளல் வரையார் - இடை உடம் படுமெய் வடிவு கோடலை நீக்கார்.

எ - டு: புளியங்கோடு , எருவங்குழி, விளவத்துக்கொட்கும் என வரும்.

"உரையிற் கோடல்" என்பதனால், உடம்படுமெய்யாவன யகரமும் வகரமும் எனக்கொள்க. இகரவீறும் ஈகார வீறும் ஐகாரவீறும் யகரவுடம்படுமெய் கொள்வன; அல்லனவெல்லாம் வகரமெய் கொள்வன. `ஒன்றென முடித்தல்' என்பதனான், விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படு மெய் கொள்க. மரவடி, ஆயிருதிணை என வரும்.

"வரையார்" என்றதனால், உடன்படுமெய் கோடல் ஒருதலை அன்றென்பது கொள்ளப்படும், கிளி அரிது, மூங்கா இல்லை என வரும்.1

(38)

1.இத் தொடர்களால், தமிழும் ஒரு காலத்தில் ஆங்கிலத்தைப்போல, புணர்ச்சியின்றி எழுதப்பட்டமை ஊகிக்கப்படும். (பாவாணர்)