7. புணர்ச்சியிற் பொருள் வேறுபடுமிடம்

ஒலி வேற்றுமையாற் பொருள் வேறுபடல்

142.எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி
இசையில் திரிதல் நிலைஇய பண்பே.

இஃது, எழுத்துக்கள் ஒன்று பலவாதல் கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) எழுத்து ஓர் அன்ன பொருள் தெரி புணர்ச்சி - எழுத்து ஒரு தன்மையான பொருள் விளங்கிநிற்கும் புணர்மொழிகள், இசையில் திரிதல் நிலைஇய பண்பு - ஓசை வேற்றுமையால் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற பண்பு.

எ - டு: செம்பொன் பதின்றொடி, குன்றேறாமா1 என வரும்.

(39)

1. செம்பொன் பதின்றொடி, செம்பருத்தி, குறும்பரம்பு, நாகன்றேவன் போத்து, தாமரைக்கணியார், குன்றேறாமா என இவை இசையில் திரிந்தன. (நச்)

செம்பொன்பதின்றொடி = செம்பொன் + பதின்றொடி; செம்பு + ஒன்பதி றொடி;செம்பருத்தி=செம்+பருத்தி, செம்பு+அருத்தி; குறும்பரம்பு= குறும்பு + பரம்பு, குறும்பர்+அம்பு; நாகன்றேவன் போத்து= நாகன்றேவன் + போத்து, நாகன்றே+வன்போத்து; தாமரைக்கணியார்=தாமரை+கணியார், தாம்+அரைக்கு+அணியார்; குன்றேறாமா=குன்றேறா+மா, குன்றேறு+ஆமா.(பாவாணர்.)