இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவழிக்கண்ணும், உயிர்மயங்கியலையும் புள்ளி மயங்கியலையும் நோக்கியதோர் வழிமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்மெழுத்து இயற்கை - உயிரீற்றினும் புள்ளியீற்றினும் இருவழியும் க ச த ப க்களை முதலாகவுடைய மொழிகளின்மேல் தோன்றும் மெல்லெழுத்தினது இயல்புகூறின், சொல்லிய முறையான ங ஞ ந ம வென்னும் ஒற்றாகும் - மெல்லெழுத்து மேற்சொல்லும் முறைமையான க ச த ப க்களுக்கு நிரனிறை வகையானே ங ஞ ந ம வென்னும் ஒற்றாகும், அன்ன மரபின் மொழிவயின் ஆன - அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய மொழிகளிடத்து. எ - டு: விளங்கோடு ,செதில் , தோல் ,பூ என வரும் . தோன்றுமென்றதனால் , தோன்றி நின்றனவும் அவ்வாறே திரிந்து மெல்லெழுத்தா மென்பது மரங்குறிது,சிறிது , தீது , பெரிது என வரும் . அன்னமரபின் மொழியன்மையின் விளக்குறுமை என்புழி மெல்லெழுத்து மிகாதாயிற்று. (1)
|